அருள்மிகு தேனுபுரீஸ்வரர் திருக்கோயில்

பட்டீச்சரம் - 612703

அருள்மிகு தேனுபுரீஸ்வரர் திருக்கோயில்

பட்டீச்சரம் - 612703

வரலாறு

வரலாறு

கோவில் வரலாறு


கோவில் வரலாறு

பிற்கால சோழ சாம்ராஜ்யத்தின் தலைநகராகப் பழையாறை மாநகர் விளங்கியது. அரசலாற்றுக்குத் தெற்கும், முடிகொண்டான் ஆற்றுக்கு வடக்கும், வளம்பொருந்திய இந்நகர் சுமார் 5 மைல் நீளமும், 3 மைல் அகலமும் உள்ள பெரிய நகராகும். இன்று இந்நகர் நாதன்கோவில், உடையாளூர், கீழப்பழையயர், மேலப்பழையார், முழையூர், பட்டீச்சரம், திருச்சக்திமுற்றம், சோழன்மாளிகை, அரிச்சந்திரபுரம், ஆரியப்படையூர், பம்பைப்படையூர், புதுப்படையூர், மணப்படையூர், திருமேற்றளிகை, கோபிநாத பெருமாள் கோயில், சுந்தரப்பெருமாள் கோயில், இராசராசேந்திரன்பேட்டை, தாராசுரம், என பல சிற்றூர்களாகப் பிரிந்துள்ளன. கி.பி. ஏழாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வளம்பொருந்திய நகராக விளங்கியுள்ளது. இதனை முதலாம் மகேந்திரவர்மனுக்குக் கீழ் அரசாண்ட ஒரு சோழர்குல குறுநில மன்னன் அரசாண்டான்.

இரண்டாம் நந்திவர்மன் கி. பி. ஏழாம் நூற்றாண்டில் பழையாறையில் ஓர் அரண்மனையும், நந்திபுர விண்ணகரம் என்னும் திருமால் கோயிலையும் கட்டி இந்நகரை மாமல்லபுரம். காஞ்சி மாநகருக்கு இணையாகச் சிறந்த நகராக வைத்துக் கொண்டான். தெள்ளாறெரிந்த நந்திவர்மன் காலத்தில் பழையாறை என்னும் இந்நகரில் அடிக்கடிப் போர்கள் நிகழ்ந்தன.

விஜயாலயச் சோழனின் முன்னோர்கள் பழையாறையில் வாழ்ந்திருந்தனர். திருப்புறம்பியம் போருக்குப் பின்னரே தஞ்சை சோழர்களின் தலைநகராயிற்று. தஞ்சை தலைநகராக விளங்கிய பின்னரும் சோழ அரசு குடும்பத்தினர் பழையாறையில் இருந்தனர். இரண்டாம் பராந்தகன் என்னும் சுந்தரச் சோழன் கி.பி. 10 ஆம் நூற்றாண்டளவில் இந்நகரில் அரசாண்டான்.

முதலாம் இராசராசச்சோழனின் அக்காளாகிய குந்தவைப் பிராட்டியார் தஞ்சையில் கி.பி.1015-இல் சுந்தரச்சோழ விண்ணகர் ஆதுரச்சாலை என்னும் மருத்துவ நிலையம் ஒன்றினை நிறுவி, மருத்துவ போகமாக நிலமும் பொருளும் அளித்த உத்தரவை பழையாறையில் உள்ள அரண்மனையிலிருந்து பிறப்பித்தார்.

கி. பி. 1019-ல் முதல் இராசேந்திரச்சோழன் கங்கை கொண்ட சோழபுரம் என்ற நகரினை அமைப்பதற்கு முன்னர் பழையாறை நகருக்கு முடிகொண்ட சோழபுரம் என்று பெயரிட்டு இங்கிருந்தே அரசாண்டான் என்பதை கல்வெட்டுகள் கூறுகின்றன. முடிகொண்டான் என்னும் பேராற்றை இவ்வரசனே வெட்டுவித்தான். இதனை திருவாலங்காட்டுச் செப்பேடுகள் உறுதி செய்கின்றன.

கி. பி. 1112-ல் முதற் குலோத்துங்க சோழன் இந்நகரில் அரண்மனை வாணாதிராசன் என்ற சிங்காசனத்தில் வீற்றிருந்து தேவதானங்களை வழங்கினான். இவ்வுத்தரவு அம்பர் மாகாளத்தில் வரையப்பட்டுள்ளது. விக்கிரமச்சோழன், இரண்டாம் குலோத்துங்கள், இரண்டாம் ராசராசன் ஆகிய மூவேந்தர் காலத்தில் வாழ்ந்த ஒட்டக்கூத்தர் இந்நகரை இராசராசபுரி (இராசராசபுரம்) என்று குறிப்பிடுகின்றார்.

13ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் மூன்றாம் இராசராசச்சோழனை வென்று சோழ நாட்டைக் கைப்பற்றிய முதல் மாறவர்மன் சுந்தரபாண்டியன் சோழ நாட்டில் முடிகொண்ட சோழபுரத்தில் விசயாபிடேகமும், வீராபிடேகமும், செய்து கொண்டான். அடைக்கலம் வேண்டிய மூன்றாம் இராசராசனுக்கு முடிகொண்ட சோழபுரத்தையும் சோழநாட்டையும் வழங்கினான்.

ஆக கி.பி. ஏழாம் நூற்றாண்டு முதல் பதினான்காம் நூற்றாண்டு வரையில் இம்மாநகர், பழையாறை, நந்திபுரம் முடிகொண்ட சோழபுரம், இராசராசபுரம் என்றும் பெயர்களைச் சில வேந்தர்களின் ஆட்சிக் காலத்தில் பெற்று 2வது தலைநகராகச் சிறப்புடன் விளங்கியது. சோழர்கள் முடிசூட்டிக் கொள்ளும் நகரங்களுள் ஒன்றாகவும் சிறந்திருந்தது.

இந்நகரிலிருந்த கோயில்கள்:


இந்நகரிலிருந்த கோயில்கள்:

1.பழையாறை வடதளி 2. பழையாறைமேற்றளி 3. பழையாறை தென்தளி 4. பட்டீச்சரம் 5. திருச்சத்திமுற்றம் 6. அருண்மொழிதேவேச்சுரம் 7. பஞ்சவன் மாதேவிச்சுரம் 8. அரிச்சந்திரம் 9. இராசராசேச்சுரம் 10. கோபிநாதபெருமாள் கோயில் 11. நந்திபுர விண்ணகரம் 12. சுந்தரப்பெருமாள் கோயில் என்பனவாம்.

சோழன் மாளிகை:


சோழன் மாளிகை:

ஒரு மைல் நீளமும் முக்கால் மைல் அகலமும் உடையது. இதில் எஞ்சியிருந்த மதிற்சுவர்களின் ஒரு பகுதி 75 ஆண்டுகளுக்கு முன் நம் அரசாங்கத்தினரால் இடிக்கப்பட்டது என்று முதியோர்கள் கூறுகின்றனர். (தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் - கல்வெட்டு கூறும் உண்மைகள் நூல் பதிப்பு ஆண்டு 1977) தற்போதைக்கு 110 ஆண்டுகளுக்கு முன்னர் எனக்கொள்க) இன்றும் இவ்வூரில் பூமியைத் தோண்டுகின்ற பொது செங்கற்கள் வந்த வண்ணம் உள்ளன.


கோவிந்த தீட்சிதர் :


கோவிந்த தீட்சிதர் :

கோவிந்த தீட்சிதர் சிறு வயதிலேயே வேத சாஸ்திரங்களில் விற்பன்னர். விஜய நகர மன்னர் அச்சுதப்ப தேவராயரின் சமஸ்தானத்தில் ராஜகுருவைபோல் பிரகாசித்தவர். தன்னுடைய கட்டுப்பாட்டில்இருந்த சோழ நாட்டுக்கு தனது மாப்பிள்ளையான சேவப்ப நாயக்க மன்னருக்கு 18 வயதே நிரம்பிய திட்சிதரை அமைச்சராக அமரும்படிச் செய்தார். தஞ்சையில் நாயக்கப் பேரரசு உதயமாயிற்று. சேவப்ப நாயக்கர் மைந்தர் அச்சுதப்ப நாயக்கர், இவருடைய மைந்தர் ரகுநாத நாயக்கர். ராகுநாத நாயக்கர் காலங்களில் இவர் அமைச்சராகப் பணியாற்றியுள்ளார். நாயக்க மன்னர்கள் வைணவ நெறியைக் கடைபிடித்தாலும் சிவா நெறியில் வழுவாத கோவிந்த தீட்சிதரைப் பெரும் மரியாதையுடன் வைத்திருந்தனர். கோயிற் திருப்பணிகளையும், புனித நதிகளில் படித்துறைகளுடன் விமானங்களுடன் கூடிய புஷ்ய மண்டபங்களைத் திருவையாறு, கும்பகோணம், திருவடைமருதூர், திருவலஞ்சுழி முதலிய இடங்களில் கட்டுவித்தார். அன்னதானச் சத்திரங்களையும், வேத பாடசாலைகளையும் நிறுவினார். கும்பகோணத்தில் 1542-ல் இவரால் தொடங்கப்பட்டு ராஜ பாடசாலை நானூற்று அறுபத்தைந்து ஆண்டுகளைக் கடந்து பீடுநடை போடுகின்றது. அய்யன் குளம், அய்யன்தெரு, அய்யன்பேட்டை, அய்யனூர், அய்யன்புரம் போன்றவை கோவிந்த தீட்சிதரால் நிர்மானிக்கப்பட்டவை. இராமேச்சுரம் பிரகார மண்டபமும், சிதம்பரம், விருத்தாச்சலம், திருவண்ணாமலை முதலிய கோயில்களில் பெரும்பகுதி இவரால் விரிவு செய்யப்பட்டன. தற்போதைய மாடி அமைப்புடைய சுவாமிமலை, கும்பேஸ்வரன்கோயில் ராஜகோபுரம் மங்களாம்பிகை மூலஸ்தானம், சந்நிதி மண்டபம் மகாமகக்குளத்தைச்சுற்றிலும் படிக்கட்டுகள், சோடஷ (16) மண்டபங்கள், கும்பகோணம் இராமசாமி கோயில் திருப்பராய்த்துறை, திருநாகேஸ்வரம் ஸ்ரீ நாகநாதர் கோவிலில் ஒரு மண்டபம் மற்றும் ஒப்பிலியப்பன் கோயில், முதலிய இவரால் திருப்பணி செய்யப்பட்டவை. வயோதிகக் காலத்தில் இவர் அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற விரும்பினார். அச்சுதப்ப நாயக்கர் இவருக்கு எடைக்கு எடை பொன் வழங்கினார். இறைவன் இவரது கனவில் தோன்றி பாழடைந்திருந்த பட்டீஸ்வரம் கோயிலைத் திருப்பணி செய்ய ஆக்ஞையிட்டார். முதிரிந்த வயோதிகக் காலத்தில் இறைவனுடைய கட்டளையை ஏற்று தனது சொந்தப் பார்வையில் விரைந்து திருப்பணி நடைபெற வேண்டும் என்பதற்காகத் திருமலைராஜன் ஆற்றங்கரையில் இல்லம் அமைத்து அனுதினமும் திருப்பணிகளைக் கண்ணுற்று வந்தார் . தெய்வத்தின் அருளால் தான் ஆற்றாத தெய்வப் பணி யாது என்று அறிந்து நந்தவனக் கைங்கர்யம் செய்யத் தொடங்கினார். இறைவனின் ஆணையின் வண்ணம் திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி திருக்கோயிலை மையமாகக் கொண்டு ஒரு மைல் சுற்றளவில் நந்தவனம் அமைத்தார். ஓர் அக்ரஹாரம் நிறுவினார். அதுவே கோவிந்தபுரம். தன்னுடைய இறுதிக் காலத்தைப் பட்டீச்சரத்தில் கழித்தார். ஸ்ரீ ஆக்ஞா கணபதி இடத்திலும், ஸ்ரீ ஞானாம்பிகையிடத்திலும் மிகுந்த பக்தி கொண்டவர். அனுதினமும் வழிபட்டு வந்தார். இதனைக் கருத்தில் கொண்ட சிற்பிகள் கோவிந்த தீட்சிதர் மற்றும் அவருடைய மனைவியார் நாகமாம்பிகா உருவத்தைச் சிலைகளாகச் செய்து ஸ்ரீ ஞானாம்பிகை சன்னதிக்கு எதிரில் பிரதிஷ்டை செய்தனர். ஈசனிடத்தில் இடையறாப் பேரன்பு கொண்ட மகான் ஒரு நாள் மாலைப் பொழுதில் தன்னுடைய மனைவியுடன் ஆதிகும்பேஸ்வரரை வணங்கி ஸ்ரீ மங்களாம்பிகையின் சன்னதியில் நமஸ்கரித்து ஜோதியில் கலந்தார்.

கோயில் விவரங்கள்

அருள்மிகு தேனுபுரீஸ்வரர் திருக்கோயில்

பட்டீச்சரம் -612 703

0435 - 2416976

விரைவு இணைப்புகள்

வரலாறு

திருவிழா

பூஜை

Designed by AnnaaSiliconTechnology.Pvt.Ltd.,

Designed by

AnnaaSiliconTechnology.Pvt.Ltd.,
Top